செவ்வாய், 28 ஜூலை, 2015

ஒளிப்படக் கலை ஓர் அறிமுகம் - பகுதி 6

தொடர்ச்சி....
                        இவற்றைத்தவிர போதிய வெளிச்சம் இல்லையெனில் அவ்வெளிச்சத்தை உண்டாக்கி படமெடுக்க பிளாஸ்கள் உருவாகின. 1930 ல் புகைப்படக்கலை முன்னேறிவருவதற்கான சான்றாக ஒரே நொடியில் படமெடுத்து தானே கழுவி பிரிண்ட்போட்டு வெளியில் தள்ளும் கேமராக்கள் உருவாகின. இது மாபெரும் சாதனையாகும். இதனை கண்டுபிடித்தவர் “டாக்டர். எட்வின்ட் லாண்ட்” . அமெரிக்காவை சார்ந்த இவரின் கண்டுபிடிப்பை புகைப்படக் கலைஞர்கள் விரும்பவில்லை. ஏனெனில் இவரது கண்டுபிடிப்பில் படத்தை மறுபிரதி எடுக்க முடியாது. பிலிமை பயன்படுத்தி படம் எடுத்தால் நெகடிவ் மூலம் எவ்வளவு பிரதிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

                     டாக்டர். ஹெரால்டு.இ. எட்கெர்ட் என்பவர் நவீன கேமராவை உருவாக்கினார். இது கடலின் ஆழத்தில் சென்று படம் எடுக்க உதவியது. இது அட்லாண்டிக் கடலின் மிக ஆழமான பள்ளம் எனப்படும் “ரேமாஞ்ச்” பள்ளத்தில் படமெடுக்க பயன்பட்டது. இப்பள்ளம் 24600 அடி ஆழம் கொண்டது. இந்த பள்ளத்தில் எலக்ட்ராணிக் மின் ஒளி உதவியுடன் கடலுடைய கடினமான இருளை வகிர்ந்து கொண்டு கேமரா இறங்கியது.

                        அக்கேமராவின் லென்ஸ் பருமன் கிட்டத்தட்ட 1 1/2 இன்ச் ஆகும். இந்த கேமரா அப்பள்ளத்தினை பல கோணங்களில் படம் எடுத்தது. இருப்பினும் கடலின் ஆழத்தில் நீரின் அழுத்தத்தை தாக்குபிடிக்கமுடியாமல் அந்த கேமரா லென்ஸ் சுக்கலாக நொறுங்கியது. எனினும் அதிர்ஸ்ட வசமாக கேமராவுக்குள்  தண்ணீர்புகவில்லை. அது பெரும் நன்மையை விளைவித்தது. அதே சமயம் வானக்கோள்களை படமெடுக்கும் நவீன கேமராக்கள் உருவாகின. 1955 ல் முப்பரிமானப் புகைப்படம் எடுக்கும் முறையை “சர்க்கார்ஸ் பீட்ஸ்டோன்” என்பார். அறிமுகப்படுத்தினார். இதனை “ஸ்டீரியா ஸ்கோப்” என கூறினர். இவ்வாறான கேமராவில் மனித கண்கள் போல இரண்டு லென்ஸ்கள் இருந்தன. இம்முறையினை “ஹாலோகிராபி” என அழைத்தனர். 

                    இன்று அதிநவீன கேமராக்கள் வந்து உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கேமரா இன்று பலரது கைகளில் அற்புதமாக நடனமாடுகின்றன. இது டிஜிட்டல் தொழிநுட்பத்தின் புரட்சியாகும்!

இதுவரை கேமரா உருவாகிவந்த வரலாற்றை கண்டோம்...இனி அதன் பயன்கள் குறித்தும் தொடர்ந்து பார்ப்போம்......

சனி, 25 ஜூலை, 2015

ஒளிப்படக் கலை ஓர் அறிமுகம் - பகுதி 5

தொடர்ச்சி....
                     “மிசன்பார்க்” என்ற ஜெர்மானியரும் “ஸ்கீமடல்” என்பவரும் சேர்ந்து  இந்த செய்தித்தாள்களை உருவாக்கினர்  என்பது தெரியவருகிறது. இம்மாதிரி புகைப்படச் செய்தித்தாளின் அமைப்பு மாறுபட்டதாக காணப்பட்டது. சம்பவங்களை படம் எடுத்துக்கொண்டு பிறகு அப்படங்களை பிளாக் செய்து கொண்டனர். அந்த பிளாக்குகளை செய்தித்தாள்களில் அச்சிட்டு வெளியிட்டனர். முதன்முதலாக “கிரிமியாவில்” நடைபெற்ற போர் நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டன. 

                     இந்த படங்களை “ரோஜர் பெண்டர்” என்பவர் எடுத்தார். 1870 முதல் 1871 வரை பாரீஸ் முற்றுகையிடப்பட்டது. அப்போது அங்குள்ள செய்திகளை அனுப்ப வினோத முறை கண்டறியப்பட்டது. செய்திகள் கையால் எழுதப்பட்டு பின்னர் புகைப்படமாக்கப்பட்ட பின் படங்கள் சிறு சிறு பதக்கங்களில் அச்சிடப்பட்டது. அவைகள் புறாவின் கால்களில் கட்டப்பட்டு உரிய இடத்தில் சேர்க்கப்பட்டன.

                      முன்பு புகைப்படம் எடுப்பது மிகவும் சிக்கலான செயலாக இருந்தது. இந்நிலை மாற ஆங்கிலேயர் இருவர் உறுதிகொண்டனர். அவர்கள் பலவித சோதனைகளை மேற்கொண்டனர். ஈரமில்லாமல் மிக விரைவில் படமெடுக்கக்கூடிய பிளேட்டுகளை உருவாக்கினர். அந்த பிளேட்டுகள் மீது ஒருவித பசை கொண்டு வெள்ளி புரோமைட்டுகளாலான உப்புக்களை ஒட்டினர். இதனால் புகைப்படம் எடுப்பதில் பெரும் சிரமங்கள் குறைந்தன. அதனால் புகைப்படக் கலையும் விரைந்து வளர்ந்தது. அந்த பிளேட்டுகளை கண்டறிந்தவர்கள் ஆர்.எல். மாடோக்ஸ், ஸர் ஜோசப் வில்சன் வான் ஆகியோராவர்.

                    இந்த பிளேட்டுகள் “வரண்ட் பிளேட்டுகள்” எனப்பட்டன. 1856ல் ஒளியினை ஏற்கக்கூடிய பசைப்பொருள் ஒன்றினை செய்வதன் மூலம் அடிப்படைப் பொருளாக கண்ணாடிக்குப்பதில் வேறு ஏதாவது ஒன்றினை செய்ய முயன்றது. 

                      பர்மிங்காம் என்ற நகரில் அப்போது இரசாயன அறிஞர் ஒருவர் இருந்தார். அவர் “அலெக்சாண்டர் ஃபாக்ஸ்” . இவரின் தீவிர முயற்சியால் “செல்லுலாய்ட்” என்ற பொருளை கண்டறிந்தார். அது பிளாஸ்டிக்கின் ஒரு வகைப்பட்டதாகும்.

                         அமெரிக்காவைச் சார்ந்த “ஜார்ஜ் ஈஸ்ட்மென்” என்பவர் இந்த செல்லுலாய்டைப் பயன்படுத்தி போட்டோ எடுக்கப்படும் பிலிமை செய்யமுடியுமா என கண்டறிந்தார். அவரது முயற்சி வெற்றிபெற்றது. 1891 ல் “ஈஸ்ட்மெனும்”, அவரது நண்பர் “ஹன்னிபால் குட்விலும்” இணைந்து செல்லுலாய்ட் பிலிமை கண்டறிந்தனர். 

                          பகல் வெளிச்சத்திலேயே காமிராவுக்குள் இந்த பிலிமை் சுருளை உபயோகித்து படம் எடுக்கும் முறை துவங்கிற்று. இதனால் புகைப்படக் கலை மேலும் விரைந்து பரவிற்று!

                         இதனால் பலரும் பயன்படுத்தும் வகையில் ஈஸ்ட்மென் ஒரு கேமராவை கண்டறிந்தார். அது சிறு அளவில்“பெட்டிக்கேமரா”  . அதன் பின்னர் வந்த பல பெட்டிக் கேமராக்களில் நவீன வசதிகளுடன் குறிப்பிடத்தக்கது “லெய்கா” கேமராவாகும். இதில் 35 மிமீ அளவுள்ள பிலிமைப் பயன்படுத்தினர். இதில் பலவண்ண  ஒளியேற்பு பசைப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டன. இதன்பின் இயற்கையின் வண்ணங்களில் உள்ள கருப்பு வெள்ளை துல்லியமாகவும், அற்புதமாகவும் படம்பிடித்தது. அந்த கேமரா 1920 ல் முறையாக விற்பனைக்கு வந்தது. அச்சமயம் வெளிச்சம் புகமுடியாத இடத்திலும் படமெடுக்க தயாராக புதியதாக “பிளாஷ்கள்“ கண்டுபிடிக்கப்பட்டன.

                   இதிலும் சிரமங்கள் இருக்கத்தான் செய்தது. வெளிச்சத்தை வாரி இறைக்கும் வகையில் ரசாயணப் பொடி எரிக்கப்பட்டது. அது எரியும்போது புகையும், துர் நாற்றமும் வீசியது. அந்த ஒளி கண்களை கூசச் செய்தது. இது 1880 வரையிலும் தொடர்ந்தது. லென்சினை மூடித்திறக்க புதுவகை விரைவுக் கபாடம் “ஷட்டர்” ஒன்று கேமராவில் அமைக்கப்பட்டது. மேலும் எடுத்த படத்தினை பெரிதாக்க மலிவு விலையில் பல சாதனங்கள் கிடைத்தன. மேலும் பல நவீன கேமராக்கள் தோன்றலாயின. இவ்வகை கேமராவில் படத்தெளிவின் நிமித்தம் லென்சை சரி செய்தல், வெளிச்சம் புகக்கூடிய துவாரத்தின் அமைப்பை சரி செய்தல் ஷட்டர் மூடித்திறக்கும் நேரத்தை  சரி செய்தல் போன்ற அனைத்தையும் ஒரே சமயத்தில் தானாகவே சரிசெய்யக்கூடிய விசைக்கட்டுப்பாடு உள்ள கேமராக்கள் தோன்றிவிட்டன. இந்த கேமராக்களில் உள்ள ஒரே ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் போதும் எல்லாம் தானாகவும்சரியாகிவிடும்.

தொடரும்......

வெள்ளி, 24 ஜூலை, 2015

ஒளிப்படக் கலை ஓர் அறிமுகம் - பகுதி 4

தொடர்ச்சி.....

                    “வில்லியம் ஹென்றிபாக்ஸ் டால்போட்” என்ற ஆங்கிலேயர் மிகச்சிறந்த அறிவியல் நிபுணராக விளங்கினார். அவர் தமது இல்லத்திலேயே ஆய்வு மேற்கொண்டார். புகைப்படக் கலையில் “நெகடிவ், பாசிடிவ்” முறைகள் உள்ளன. அதை முதலில் கண்டறிந்து  கூறியவர் இவர்தான். நெகடிவ்- மூலப்பிரதி, பாசிடிவ்- நேர்ப்பிரதி இதனால் ஒளிப்படக்கலையில் ஓர் மாற்றம் உண்டானது.

                           டாகரே டைப்பில் ஒரு பெரும் குறை இருந்து வந்தது. அதாவது உலோக தட்டில் படம் நேரடியாக பதிவாகிறது. இதனால் நேர்ப்பிரதி மட்டும் கிடைக்கிறது. இதிலிருந்து வேறு பிரதிகள் பெற முடியாது. அதுபோல படத்தினை பெரிதாக்கவும் முடியாது.

விசேச ஏற்பாடு 
                      ஆனால் டால்போட்டு , வெள்ளையை கருப்பாகவும், கருப்பை வெள்ளையாகவும், மாற்றப்படுவதன் மூலம் அதன்பின் மூலப்பிரதி படத்தின் வழியாக சூரிய ஒளியினைச் செலுத்துவார். பின்னர் இரசாயணப்பொருள் தடவப்பட்டுள்ள வேறு காகிதத்தில் நேரான பிரதியைத் தயாரித்துவிடுவார். இந்நேரத்தில் பிரபல வானியல் நிபுணர் “சர் ஜான் ஹர்டில்” நேர்ப்பிரதியில் படங்கள் நிலைத்து நிற்க வேண்டுமெனில் “சோடாவுடைய ஹைப்போ சல்பைட்டை” உபயோகிக்க வேண்டுமென ஆலோசனை கூறினார். அதற்கிணங்க ஹைப்போ சல்பைட் பயன்படுத்தப்பட்டது. இநத முறையை “கேலோடைப்” என்றனர்.
                          டால்போட் இதனைக் கண்டறிய காரணம் இத்தாலியில் இயற்கை அமைப்பினை வரைபடமாக தயாரிப்பதன் நிமித்தம் ஒரு பயணம் மேற்கொண்டார். அப்போது இயற்கை வடிவங்களை காகிதம் ஒன்றில் பதிந்து நீண்ட காலம் நிலைத்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும் என்று சிந்தித்ததாகவும், அதன் வெளிப்பாடே “கேலோடைப்” என்றும் கூறினார்.

                     1841ல் அவர் தமது கண்டுபிடிப்பை உரிமைப்பதிவு செய்து கொண்டார். பிறகு ஒரு ஆண்டு கழித்து அவர் சிறப்பிக்கப்பட்டார். “ராயல் சொசைட்டி”யின் தங்கப்பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது. எனினும் டாகரே டைப் போல இது வேகமாகப் பரவவில்லை. பிரான்சிலும், வெளிநாடுகளிலும் டாகரேவின் மதிப்பு உயர்ந்து கொண்டே போனது. 1840 ல் டால்போட், கட்டிடங்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றை புகைப்படம் எடுத்தார். அவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாகவும் வெளியிட்டார். அப்படியும் அவரது படைப்பு பிரபலமாகவில்லை. டாகரேயின் நண்பர் ஒருவரின் மருமகன் ஒருவர் மூலப்பிரதியின் மூலம் பிரதிகளைத் தயாரிக்க காகிதத்துக்குப் பதில் கண்ணாடி தகடுகளை பயன்படுத்தலாம் என யோசனை கூறினார். அவர் பெயர் “நீப்ஸ் டி. விக்டர்” . 1848ல் அவர் இவ்வித யோசனை கூறியபின் புகைப்படக்கலை புத்துயிர் பெற்றது. 

                          இதனால் ஓவியர்கள் பலர் அச்சமடைந்தனர். எனவே தாங்களும் காமிராக்களை வாங்கி பயப்படுத்தத் தொடங்கி தங்களின் தொழிலை மாற்றிக் கொண்டனர். அந்நாளில் இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஓவியராக  “டேவிட் ஆக்டேவியஸ் ஹில்” என்பவர் இருந்தார். பிரான்ஸில் “பிராங்பர்ட்” என்பவர் 1857ல் வில்லி என்ற இடத்தில் முதன் முதலாக ஓவியங்கள் வெளியீட்டு நிறுவனம் ஒன்றை நிறுவினார். மேலும் இவ்விருவரும் எடுத்த புகைப்படங்கள் இன்றும் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. 

                         1846ல் ஆங்கிலேய விஞ்ஞானி ஒருவர் காமிராவை வானியல் ஆய்வுக்கு உதவும் கருவியாக பயன்படுத்த ஆய்வு செய்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் புகைப்படக் கலை வானியல் ஆய்வில் புகுத்தப்பட்டது!

                                புகைப்படக்கலையில் புதுமையைப் புகுத்த முயன்ற பிரஞ்சு புகைப்படக் கலைஞர் ஒரு புதிய நவீனத்தைக் உருவாக்கினார். அவர்தான் “டிஸ்டேரி” அவர் புகைப்பட விசிடிங் கார்டுகளை தயாரித்தார். அவை மிகவும் புகழப்பட்டன. ஒரு நாளில் 1800 கார்டுகள் தயாரித்தார். இந்த கார்டுகளை மக்கள் பெரிதும் விரும்பினர்.
                     இந்த காமிராக்கள் எல்லாமே வருவதற்கு முன் 1840ல் உலோக காமிரா ஒன்று தயாரிக்கப்பட்டது. அதனை பிரான்ஸ்விக் என்ற ஊரைச் சார்ந்த “பிரடெரிக்” என்பவர் தயாரித்தார். இதில் லென்சானது 1:3:4 என்ற ஒளியை ஏற்கக்கூடியதாக இருந்தது. இதில் ஒளி புக வேண்டிய நேரம் 2லிருந்து 1 நிமிடமாக குறைந்தது. 1850-1860 (அ) 1860 -1870 க்குள் நிகழும் சம்பவங்களை படமெடுத்து செய்திகளை விற்கக்கூடிய “ செய்தித்தாள்கள்” புழக்கத்தில் வந்தது என தெரியவருகிறது. 

தொடரும்.......



செவ்வாய், 21 ஜூலை, 2015

ஒளிப்படக் கலை ஓர் அறிமுகம் - பகுதி 3

தொடர்ச்சி....

                     அந்த இரு ஆய்வாளர்களும் ஒற்றுமையுடன் கடுமையாக உழைத்தனர். 1831 ல் டாகரே “வெள்ளி அயடேட்” பொருத்தமான பொருள் என்று அறிந்தார். இச்சமயத்தில் நைசோபர் நீப்ஸ், பெட்டிக் காமிராவினை திருத்தி அது பயனுள்ள பொருள் என பலரும் சொல்லும்படி செய்தார்.  அதன் திருத்தங்கள் பின்வருமாறு...
                    இந்த காமிரா அழகான நீண்ட பெட்டியாக இருந்தது. பின்பக்கம் விழக்கூடிய தட்டிலிருந்து லென்ஸ் வரையிலும் ஆறு அங்குல நீளம் உடையதாக இருந்தது. பின்னர் லென்சை ஒரு குழலில் பொறுத்தினார். பிம்பம் தெளிவாக விழும்வரை நீளத்தினை சரி செய்து கொள்ளலாம். எல்லாவிதமான தடங்கல்கள் கிராமங்கள், அனைத்தையும் பட்டபின் வெற்றிபெற வாய்ப்பு வந்த வேளையில் நைசோபர் நீப்ஸ் மரணமடைந்தார்!

                         எனினும் தொடர்ந்து டாகரே ஆய்வுகளை மேற்கொண்டார். தொடர்ந்து 4 ஆண்டுகள் கடுமையாக ஆராய்ந்ததன் பலனாக கி.பி.1837ல் அந்த நிகழ்வு தற்செயலாக நடந்தது. நிழற்படம் விழவேண்டிய தட்டுக்களில் சில போதுமான நேரம் கழித்து திறந்தபோது அவைகள் வெளிச்சத்தினை தொடாமலேயே இருந்தது. எனவே அவை கெட்டுப்போய்விட்டதாக கருதி அலமாரி ஒன்றில் போட்டுவைத்தார். ஒரு சில வாரங்கள் கழித்தபிறகு அவற்றை கழுவி மீண்டும் பயன்படுத்தலாம் என வெளியில் எடுத்தபோது அவர் ஏற்கனவே எடுத்திருந்த படங்கள் தெளிவாக பதிவாகிஇருந்தது. 

                         ஆச்சர்யத்தில் மூழ்கிய அவர் அந்த அலமாரியை தீவிரமாக சோதனை செய்தார். அப்போது பாட்டிலில் இருந்த பாதரசம் உடைந்து சிதறியிருப்பதை கண்டார். அவருக்கு உண்மை விளங்கிற்று. “வெள்ளி அயடைட்”  புசப்பட்ட தட்டு ஒன்றில் ஒரு படத்தினை எடுக்கச் செய்து பின் இருட்டறையில் பாதரசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சூடேற்றினார். அதிலிருந்து பாதரச ஆவி கிளம்பியது. அந்த ஆவியை தட்டின் மீது பரவச் செய்தார். உடனே அவர் எடுத்த படம் தெளிவாக விளங்கியது. பின்னர் வெள்ளி உப்புக்களை கழுவி எடுக்க “சோடியம் சல்பேட்” என்ற திரவத்தில் முக்கி எடுத்தார். இப்போது படம் பளிச்சென மின்னியது. இந்த முறையில் ஒளிப்படம் எடுப்பதற்கு “டாகரியா டைப்” என்று பெயர் சூட்டப்பட்டது!

                             புகழ்பெற்ற பௌதிக அறிஞராகவும், வானவியல் நிபுணராகவும், விஞ்ஞான கழக செயலாளராகவும் பிரான்காப்ஸ் அரோகர் என்பவர் இருந்தார். அவரது முன்னிலையில் தனது கண்டுபிடிப்பை விளக்கிக்கூறி அதனை செயல்படுத்திக் காட்டினார் டாகரே. அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது கண்டுபிடிப்பை இந்த உலகிற்கு பரிசாக வழங்கினார். இதனால் பிரான்ஸ் நகரம் பெருமைக்குள்ளானது. பிரான்ஸ் நாடாளுமன்றம் இவருக்கும் இவரின் மறைந்த நண்பர் நைசோபர் நீப்ஸிற்கும் நன்றி தெரிவித்தது. அது மட்டுமின்றி டாகரேவிற்கும், நீப்ஸின் மகனிற்கும் ஓய்வுதியத்தொகை வழங்கி சிறப்பித்தது. 

                     டாகரியா டைப் படங்களினால் மக்கள் பைத்தியங்களைப்போல மாறினர். தங்கள் ஒளிப்படத்திற்காக அரைமணி நேரம் வரை வெயிலில் உட்கார்ந்திருந்தனர். டாகரே கேமராவை 1840ல் முதன் முதலாக போஸ்டன் நகரைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் பயன்படுத்தினார். 1839 ல் பிரான்ஸ் நாடு முழவதும் மக்கள் பைத்தியங்களைப்போல நடந்து கொண்டனர். தங்களின் உருவங்களை தாங்களே பார்த்து மகிழ்ந்தனர். இந்த சமயத்தில் மற்றொரு சம்பவம் நடந்தது.

தொடரும்