வெள்ளி, 20 மே, 2011

ஒளிப்படக் கலை ஒரு அறிமுகம் - 2

தொடர்ச்சி....

அதன்பிறகு இக்கட்டதோடு சோதனை நின்று போனது . தாமஸ் விடாது பல சோதனைகள் செய்தார், இச்சோதனை பின்னாளில் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி ரசாயனப் பொருள் பூசப்பட்ட காகிதத்தின் மேல் தாமஸ் வெட்ஜ் உட் சில இலைகளை வைத்து சோதனை செய்தார். இலை மூடபடாத பகுதி வெளிறிய கருப்பு நிறமாக மாறியது. அப்பகுதியில் மிகத் தெளிவான முறையில் வெண்மையான வண்ணத்தில் இலையின் தண்டும் நரம்புகளும் விழுந்தன .

1794 இல் ''காமெரா'' என்ற ஒன்றினை பயன்படுத்துவது குறித்து இவர் குறிப்பிட்டார் என்று சொல்லபடுகிறது.

மாவீரர் நெப்போலியனின் படை அதிகாரியான ''நைசொபர் நீப்ளின் '' அவர்களின் கண்டுபிடிப்பு . அவர் அறிவியல் ஆய்வில் மிக நாட்டமுடையவர் , கி.பி. 1814 இல் ஒளி பட்டவுடன் மாறுதல் அளிக்கும் சில ரசாயனப் பொருட்களை வைத்து சோதனை மேற்கொண்டார் . அவரின் சோதனைகளில் இரண்டு காரியம் பெரும் புகழ் பெற்றது , ஆனால் அவரின் பெயர் புகழடையவில்லை .
1. ''ஒளிப்படக் கலை'' - இச்சொல்லை தந்தது .
2. தொலைவிலுள்ள உருவங்களை தாள் ஒன்றின் மீது படமாக பிடிக்கப் படுவதற்கு ''இருட்டறை பெட்டி கேமரா'' என்ற ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்பதாகும் .

லியோனர்டா டாவின்சியின் தீர்க்க தரிசனம் :
உலகின் மிகச்சிறந்த ஓவியர்களுள் புகழ் மிக்கவர் இவர் . தமது கற்பனையில் , அளவிறந்த அறிவியல் கருவிகளை கண்டறிந்தார் . அவற்றை எப்படி செய்வது என்பது குறித்து அவர் திட்டவட்டமான ஒரு தீர்க்கத்தை தந்தார். மேலும் அக்கருவிகளை குறித்து தன் புத்தகத்தில் குறித்து வைத்தார்.
உட்பக்கம் இருளாக இருக்கும் பெட்டி ஒன்றில் சிறு துளையிட்டு அத்துளை வழியாக ஒளிக்கதிர்கள் செல்கையில் ஒளியானது நுழைவதற்கு எதிரில் உள்ள காட்சியுடைய சின்னஞ்சிறு தலைகீழ் பிம்பமானது எதிர்புறத்தில் விழுகின்றது. என்பது அறியப்பட்டது . காமெராவின் அடிப்படைத் தத்துவமாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

துறவி ஜான் கண்டறிந்த உண்மை:
இவ்விதமான இருள் பெட்டியினுள் துளையில் வெறும் துளையாக விட்டுவிடாமல் கண்ணாடி வில்லை ( லென்ஸ்) ஒன்றை பொறுத்தி சோதனை செய்தார் . இச்சோதனையில் பிம்பம் நேராக தெளிவாக விழுந்தது.

ரகசியக் கேமரா :
கேமரா கண்டுபிடிக்கும் முன்பே கி.பி.1569 இல் ரகசியக் கேமரா ஒன்று இருந்ததாக சொல்லபடுகிறது. இது வீட்டினுள் இருந்து பிறர் காணாத வண்ணம் வெளியில் நடப்பவற்றை நாம் காட்சிகளாக பார்க்கலாம் . இதன் மாதிரி ஒன்று ''எடின்பெர்க்'' மலைகோட்டையில் உள்ள அருங்க்காட்சியகதிலே உள்ளது.
இந்த காமெராவை ''கியாம் பெட்டிஷ்டா டெல்லா போர்டா'' என்ற புவியியல் அறிஞர் கண்டறிந்தார் . இக் காமெரா குவி லென்சுடன் கூடிய ஓட்டையானது பெட்டியின் மேல் பக்கத்தில் உள்ளது. இதற்கு மேல் அடித்தளமிட்டதற்கு சுமார் 45 டிகிரி கோணத்தில் இருக்கும்படி ஒரு லென்சானது பொருத்தப்பட்டுள்ளது. இப்படி லென்ஸ் வைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஒளிக்கதிர்களானவை செங்குத்தான முறையில் பிரதிபலிக்கபடுகிறது. தெருவின் பிம்பம் பெரிதாய் உள்ள வட்ட வெண்மை நிற மேசையின் மீது விழுவது போல அமைக்கப் பட்டிருந்தது. இக் கேமரா அந்நாளில் வீட்டை விட்டு வெளிவராத பெண்களுக்காக அமைக்கப் பட்டதாகும் .

நைசொபர் நீப்சின் தீவிர ஆய்வு :
இவர் ஒரு அறிவியல் ஆய்வாளர் அல்ல. எனினும் ஆய்வுகளில் நாட்டம் கொண்டவர் . இவர் காமெராவில் ஒளிக் கதிர்களை பிடித்து நிறுத்தக் கூடிய வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டார் . இருள் பெட்டியான காமெராவின் மூலம் வரக் கூடிய ஒளிக்கதிர்களை பிடித்து நிறுத்துவதால் பிம்பம் விழக்கூடிய இடத்திலே அவர் கைக்கு கிடைத்த பல பொருட்களை வைத்து சோதனை செய்தார் . இச்சோதனையில் 'தார் வார்னிஷ் ' பெரிதும் பயன்படும் என கண்டறியப் பட்டது. தார் மிக நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருக்குமானால் வெளிச்சம் பட்ட பகுதி தாவர எண்ணையில் கரையக் கூடியதாக மாறிவிடும் . தார் பூசிய தட்டுகளிலே பிம்பமானது போதுமான அளவு வரை விழும்படி செய்தார். பின் இதர பகுதிகளை செதுக்கி எடுத்து விட்டு அச்சாக அதனை அடித்தார். கோடு போன்ற படம் உருவானதே தவிர தெளிவான படம் கிடைக்கவில்லை . இது மிகவும் கடின வேலையாகவும் இருந்தது.

நட்பு :
இப்பிரச்சனையில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் . இதே நேரத்தில் இவருக்கும் ஜாகுவிஸ் மாண்டே டாகரே என்ற ஆய்வாளர் ஒருவரின் நட்பு கிடைத்தது. இருவரும் சேர்ந்து இத்துறையில் ஆய்வு செய்தார் .கிடைக்கும் வருவாயினை சமமாக பகிர்ந்து கொள்வதென முடிவு செய்தனர். இதில் டாகரே வெள்ளி நைட்டுரேட் பயன்படுத்தி பல சோதனைகளை செய்தார் . ....

தொடரும் ....

வியாழன், 19 மே, 2011

கிராமமும் சூழலும்


தேனியிலிருந்து நமது நண்பர் திரு ஜெயச்சந்திரன் அவர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன . படத்தை பற்றிய கருத்துகளை பதிவு செய்யவும் . அது நம்மை மேலும் மெருகேற்றும் . நன்றி .


ஞாயிறு, 8 மே, 2011

ஒளிப்படக்கலை ஒரு அறிமுகம் - பகுதி 1

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் ,

இன்று நாம் ஒளிப்படக் கலையில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வந்தாலும் இந்த கலைக்கான அடிப்படை விதிமுறைகள் அன்றிலிருந்து இன்றுவரை பொதுவானவைதான் . எனவே இந்த கலையின் மூலம் வருமானம் பெரும் நாம் இந்த கலைக்கான ஒளிப்படக் கருவிகள் கண்டுபிடிக்கப் பட்ட காலத்தையும் அதன் வரலாற்றையும் அறிந்துகொள்வோம் . பெரிய திரைப்படக் கல்லூரிகளில் மட்டுமே கற்பிக்கப்படும் ஒளிப்படக் கலையை பள்ளிகளில் ஒரு தொழில் நுட்ப பாடமாக கொண்டுவர வேண்டும் என்பது எனது ஆசை அது உங்களுக்கும் இருக்குமல்லவா ? எனவே இந்த கலையின் வரலாற்றை அறிவதன் மூலம் நமது பயன்பாடு இந்த சமூகத்திற்கு எந்தளவிற்கு தேவை என்பதை அறிவோம் !

தி பெயனிடிலா ரோச் அவர்களின் கருத்து

ஆரம்ப நாட்களில் ஒரு சில ரசாயனப் பொருட்களின் மீது சூரிய ஒளியானது படுவதன் மூலம் சில கிரியைகள் உண்டாகின்றன . இதனால் ஓவியங்கள் தானே உருவாகின்றன என்ற கருத்து பரவலாக இருந்தது .

தெளிவில்லாத இக்கருத்து கிட்டத்தட்ட 18 ஆம் நூற்றாண்டில் உருவானது. கி.பி. 1760 இல் தி பெயனிடிலா ரோச் என்ற பிரெஞ்சுக் காரர் நூல் ஒன்று எழுதினார் . இந்த நூலில் ''வெள்ளி நைட்ரேட் '' என்ற ரசாயனம் பூசப்பட்ட தளத்திலே வெளிச்சம் பட்டால் என்ன விளைவு ஏற்படும் என விரிவாக விளக்கியிருந்தார் . இவ்விளைவின் மூலம் செயற்கை முறையில் வண்ணத்தினை தீட்ட முடியும் என கூறியிருந்தார் .

ஹார்ல் வில்ஹெம் ஸ்கீளியின் ஆய்வு

இந்நேரத்தில் ஸ்வீடன் நாட்டில் ரசாயன அறிஞர் ஒருவர் இருந்தார் . அவர்தான் மேற்குறிப்பிட்டவர் . அவர் வெள்ளியும் இன்னொரு ரசாயனப் பொருளும் சேர்ந்து உருவாவது வெள்ளி உப்புகள் என்றார். இவ்வெள்ளி உப்புகள் சூரிய ஒளி பட்டு மறைந்து விடுகிறது .அதனால் வியப்படைந்தார் . அதுகுறித்து பல விரிவான ஆய்வுகள் மேற்கொண்டார் .

பேராசிரியர் சார்லசின் முயற்சி

இவர் மிக சிறந்த விஞ்ஞானி . இவரே நைட்ரஜன் பலூன்களை கண்டுபிடித்தார் .
இவர் வெள்ளி உப்புகளின் உதவியால் நிழல் வடிவமான பல படங்களை தயாரிக்க முயன்றார் . நிழல் வடிவ படங்கள் அந்நாளில் அனைவராலும் விரும்பப்பட்ட படங்களாக இருந்தன . அது அந்நாளைய நாகரிகம் .

லேடி ஆனியின் கண்டுபிடிப்பு

கி.பி. 1799 இல் ஹேமில்டன் பிரபுவின் வம்சாவளியினர் குடியிருந்து வந்தனர் அந்த மரபில் ஒன்பதாவது பிரபுவின் மகள்தான் இவர் .கி.பி. 1670 லிருந்து 1680 வரை பராமரிக்கப்பட்ட அந்த மாளிகை அதன் பின்னர் சுத்தம் செய்யப்படவில்லை . பின்னாளில் இவரால் சுத்தம் செய்யப்பட்டபோது ஹேமில்டன் பிரபுவின் படத்தையும் சேர்த்து பல படங்களுக்கு எவரும் வரையாமலேயே பல படிகள் ( நகல்கள் ) கிடைத்தன . அது அவருக்கு வியப்பை தந்தது . இந்த படங்கள் எப்படி உருவாகின ? அவருக்குப் புரியவில்லை

அன்பளிப்பு :
எனவே லேடி ஆனி அப்படங்களை அறிவியல் ஆய்வில் மூழ்கியிருந்த எட்டு நண்பர்களை அழைத்து அப்படங்களை கொடுத்தார் . அவைகளை ஆய்வு செய்ய சொன்னார் . அவர்கள் ஆய்வு செய்யட்டும் என்ற நல்ல நோக்கம் அவரிடமிருந்தன .

படிகள் ( நகல்கள் ) உருவாக காரணம் :
பிரபுவின் மாளிகையில் உள்ள ஓவியங்களின் மூல்ப்படங்கள் கெட்டியான அட்டைகளில் ஓட்டப் பட்டிருந்தன . அவ்வட்டையில் நீலவன்னமும் , பழுப்பு வண்ணமும் , இருந்ததால் அதில் பதிந்து பின்னாளில் படிகளாக மாறின .
இன்றும் ...
ஹேமில்டன் பிரபுவின் வீட்டிலிருந்து லேடி ஆனியால் நன்கொடையாக கொடுக்கப்பட்ட அப்படம் அவரின் நண்பர்களில் ஒருவரால் தீர்கமாக ஆய்வு செய்யப்பட்டது . அவர் ஆய்வு செய்த அந்தப்படம் இன்றும் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி என்ற அறிவியல் கழகத்தில் உள்ளது .

தாமஸ் வெட்ஜ் உட்:

இதன் பின் படங்களைப் பற்றி புதிய பரிணாமம் ஒன்று ஒவ்வொருவர் மனதிலும் வாழத் துவங்கின . இதனால் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு தொடங்கும் முன்னரே ஓவியங்களிலிருந்து பிரதிகள் எடுக்கும் முறை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது.
''ஜோசையா வெட்ஜ் உட் '' என்பவர் அந்நாளில் புகழ் பெற்றிருந்தார் . அவரின் மகன் தாமஸ் இதுகுறித்து ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபடலானார் .

ஆய்வு முடிவுகள் :
பல ஆய்வுகளுக்கு பின் தாம் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் பற்றி கி.பி. 1802 இல் வெளியிட்டார் . அவரின் ஆய்வுகள் பற்றி கூறிய அறிக்கையில் ''சர் ஹம்ப்ரி டேவி'' என்ற அறிவியல் அறிஞர் செய்து முடித்த ஆய்வு பற்றியும் கூறி இருந்தார் .
வெட்ஜ் உட் கண்ணாடி ஒன்றின் மீது வரையப்பட்ட ஓவியங்களுக்கு எப்படி படிஎடுப்பது என ஆராய்ந்தார் . ஒரு காகிதத்தில் வெள்ளி நைற்றேட்டனாது முக்கி எடுக்கப் பட்டது . அதில் சூரிய ஒளி விழும்படி செய்யப்பட்டது . பின் இதன் மூலம் படிகள் எடுக்க முடியுமா என முயற்சி செய்யப்பட்டது. இம் முயற்சியில் ரசாயனப் பூசுகளை நீக்கி கண்ணாடியில் விழுந்துள்ள உருவத்தினை அழிந்துவிடாது காப்பாற்றி நிலை நிறுத்த தெரியவில்லை . இதுவரையில் சர் ஹம்ப்ரி டேவியின் ஆய்வும் தமஸ் வெட்ஜ் உடின் ஆய்வும் ஒத்திருந்தன .

தொடரும்........

வெள்ளி, 6 மே, 2011

நம் நாட்டு ஓவியக்கலை !



அழகு கலைகள் ஐந்து வகைப்படும்

ஓவியக் கலை , கட்டிட கலை , சிற்பக் கலை, இசைக் கலை , காவியக் கலை ஆகியனவாகும் .

இதில் முதலில் நம் நாட்டு ஓவியக் கலையை அறிவோம் !
என்னடா ஒளிப்படக் கலைக்கு ஒரு இணையத்தளம் என்று சொல்லிவிட்டு ஓவியத்தை பற்றி சொல்லுகிறானே என நினைக்க வேண்டாம் , உலகில் முதலில் மனிதனால் கருத்துகளை பகிர்ந்துகொள்ள பயன்படுத்தப் பட்டது ஓவியக் குறியீடுகள்தாம் . அவையே பின்னர் மொழிக்கான எழுத்தாக பயன்பட்டது .

ஓவியங்கள் நேர்கோடு , வளைந்த கோடு , கோணக் கோடு முதலிய கோடுகளாலும் , சிவப்பு , மஞ்சள், நீலம், கருப்பு, ஆகிய நிறங்களாலும் ஓவியங்கள் வரையப் படுகின்றன . சுமார் 2000, ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழர் நாட்டில் ஓவியக் கலை மிக சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது . நம் நாட்டு ஓவியங்கள் பெரும்பாலும் சுவர் ஓவியங்கள்.

ஓவியங்கள் மரப் பலகை, துணிச் சீலை , முதலியவற்றிலும் , தோலிலும் வரையப் பட்டன . பண்டை காலத்தில் மன்னர்களின் அரண்மனைகள் , பிரபுக்களின் மாளிகைகள் , கோயில்களின் மண்டபங்கள், பெரு வணிகர்களின் வளமனைகள், போன்ற இடங்களில் ஓவியங்கள் வரைந்து அழகு செய்தனர். ஒவ்வொரு மன்னரின் அரண்மனைகளிலும் ''சித்திர மாடம் '' எனும் கட்டிடம் தனியே அமைந்திருக்கும் . ஏறத்தாழ கி.பி. 600 முதல் 630 வரை அரசாண்டவனும் , திருநாவுகரசர் காலத்தில் இருந்தவனுமான ''மகேந்திர வர்மன் '' எனும் பல்லவ அரசன் தனது சிறப்புப் பெயர்களில் ஒன்றாக ''சித்திரகாரப்புலி '' எனும் பெயரை பெற்றிருந்தான். இதன் மூலம் அவன் ஓவியக் கலையில் சிறந்து விளங்கினான் என்பது ஆரியப் படுகிறது. இதை காஞ்சிபுரத்திற்கு அடுத்துள்ள மாமன்மூரில் அமைந்த குகைகோயில் சாசனம் கூறுகிறது .

அடியார்ற்கு நல்லார் காலத்தில் ஓவிய நூல் இருந்துள்ளது. ஓவியத்திற்கு முறையான அளவுகலான நிற்றல் , இருத்தல், கிடத்தல், இயங்கல், எனும் செயல்பாடுகள் உள்ளன . அவை இரண்டு பகுதிகளை உடையது.
1. யானை , தேர், பூனை (?), முதலியன
2. பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிபுடம், மண்டிலம் , எகபாகம், என்பனவாகும் .

ஓவியத்தை வட்டிகை செய்தி என்பர். வண்ணம் தீட்டாத ஓவியம் புனையா ஓவியம் எனப்படும் . ''கொங்கு வேளிர்'' தமது பெருங்கதையில் கூறும் செய்திகளாவன ..
ஓவியர்கள் நகை , உவகை, அவலம், வீரம், முதலிய எட்டு வகை மெய்பாடுகளையும் இருத்தல் , நிற்றல், முதலிய ஒன்பது விருதிகளையும் , தமது ஓவியங்களில் அமைத்து வரைந்ததை விளக்குகிறது.

கி.பி. 600 குப் பின் உண்டான கோயில்கள், மண்டபங்கள், குகைகள் , கற்றளிகள், ஆகியவற்றில் எழுதப்பட்ட ஓவியங்கள் பெரும்பாலும் அழிந்து விட்டன . இருப்பினும் சித்தன்னவாசல் , குடுமியான் மலை போன்ற இடங்களில் மட்டுமே அழிந்து வரும் நிலையில் சில ஓவியங்கள் உள்ளது. அவற்றை காப்பது நம்மை போன்ற கலைஞர்களின் கடமையாகும்.

தற்போது சில இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டு அறியப்பட்டுள்ளது. அவை நமது முன்னோர்களின் காலத்தையும் , அவர்களின் வாழ்க்கை முறைகளையும் , அறிய உதவுகிறது . இப்போது நம் ஒளிப்படக் கலைக்கு முன்னோடியான ஓவியக்கலையின் சிறப்பு தெரிகிறதா நண்பர்களே .
ஓவியம் வரைய தேவையான விதி முறைகள் ஒளிப்படம் எடுக்கவும் பயன்படும் என்பது உண்மைதானே !

நூல் ஆதாரம் : தமிழர் வளர்த்த அழகு கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி .
தொகுப்பு : முருகானந்தம் .

கரூரிலிருந்து உங்களில் ஒருவனாக...


அன்புள்ளம் கொண்ட ஒளிப்படக் கலைஞர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் . முதலில் எனது குருநாதர் , குடும்ப நண்பர் திரு. செழியன் அவர்களுக்கு நன்றிகள்.

வெள்ளியணை என்ற சிற்றூரில் இருந்து வாழ்க்கை எனும் கால வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு புலம்பெயர்ந்த பல்லாயிரகணக்கான மக்களில் நானும் ஒருவன் . இதோ இப்போது ஒரு ஒளிப்படக் கலைஞனாக உங்களில் ஒருவனாக இந்த கரூர் மண்ணில் வலம் வருகிறேன். வரலாற்றை பதிவு செய்பவர்கள் நாம் இன்னமும் ஒளிக்கு பின்னால் மங்கி கிடப்பது வேதனையானது. நமது திறன்களை வெளிஉலகிற்கு காட்டவும் தெரியாத பல தொழில் நுட்பங்களை அறிந்துகொள்ளவும், நம்மில் முன்னோடிகளின் இந்த துறை சார்ந்த கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும் ஒரு தளம் தேவை. அதனை இந்த ஒளிப்பதிவு வலைபூ நிச்சயம் நிறைவேற்றும் என கூறிகொள்வதில் ஒரு மாணவனாக பெருமிதம் அடைகிறேன் .

எனது முயற்சிக்கு பெரும் ஊக்கமளிக்கும் நண்பர்களுக்கும் , நமது ஒளிப்பதிவாளர்கள் சங்கத்திற்கும் நன்றிகள் .

முருகானந்தம் ,
ஓவியன் ,
ஒளிப்பட கலைஞன் ,
கருவூர்.
அழைக்க : 9843955627